உக்ரைனில் செய்தியாளரும் ஒளிப்பதிவாளரும் உயிரிழப்பு

உக்ரைனில் பெண் செய்தியாளரும் ஒளிப்பதிவாளரும் உயிரிழப்பு

by Bella Dalima 16-03-2022 | 5:18 PM
பெண் செய்தியாளரும் ஒளிப்பதிவாளரும் உயிரிழப்பு உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 20 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் தனியார் செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவ் வெளியே உயிரிழந்துள்ளனர். போர் செய்தி சேகரிப்பிற்காக அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்களது வாகனம் போர் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற நிருபர் உக்ரைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஆவணப்படத் தயாரிப்பாளரான ப்ரென்ட் ரெனாட், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதனிடையே, போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ​Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து சுமார் 20,000 பேர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலை மீது ஏவுகணை தாக்குதல் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாடசாலை ஒன்று சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மறுபக்கம் தாக்குதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலாயிவ் பகுதியில் உள்ள பாடசாலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பாடசாலை தரைமட்டமானது. தற்போது இடுபாடுகள் அப்புறப்படுத்தப்படும் நிலையில், 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி கோபுரம் மீதான தாக்குதலில் 19 பேர் பலி உக்ரைனிலுள்ள தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்ய படையினா் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 19 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். NATO உறுப்பு நாடான போலந்திற்கு 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரிவ்னே நகரின் அன்டோபோல் கிராமத்தில் அமைந்துள்ள கோபுரம் மீது ரஷ்யா திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது பலி எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளதாக ரிவ்னே நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 30 இலட்சம் பேர் அகதிகளாகினர் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறியவா்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. நாடுகளின் அரசுகள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளவா்களில் 15.7 இலட்சம் போ் உக்ரைன் அல்லாத மூன்றாவது நாடுகளை சோ்ந்தவா்கள் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக போலந்தில் 18 இலட்சம் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். அவா்களில் பெரும்பான்மையானவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவா்.