ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் 23 பேர் பலி

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதியில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; 23 பேர் பலி

by Bella Dalima 15-03-2022 | 3:47 PM
Colombo (News 1st) டொனேட்ஸ்க் (Donetsk) பகுதியில் உக்ரைன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு உக்ரைனில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்தின் ஒரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது போர் குற்றம் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனிடையே, சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய போர் தொடர்பாக சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளது. போர் என்ற பெயரில் தங்களது நாட்டிற்குள் புகுந்து ரஷ்ய படைகள் சட்டவிரோத தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கூறியுள்ளது. போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் முறைப்பாடு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வந்தது. இதனையடுத்து, நாளை (16) சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய போர் தொடர்பாக சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்களை கொடுத்து உதவினால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. உக்ரைன் போரில் ஆயுதங்களை கணிசமான அளவிற்கு ரஷ்ய இராணுவம் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனை சீர்குலைக்க சக்தி வாய்ந்த ஆயுதங்கள் அதிகம் தேவைப்படுவதாக ரஷ்யா கருதுகிறது. இதற்காக சீனாவிடம் ரஷ்யா மறைமுகமாக பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறது. ஏவுகணைகள், பீரங்கிகளை வழங்குமாறு சீனாவிடம் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா ஆயுதங்களை கொடுத்து உதவினால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. சீனா மீதும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், ரஷ்யாவிற்கு உதவ போவதாக அமெரிக்கா வேண்டுமென்றே தவறான தகவல்களை வௌியிடுவதாக சீனா தெரிவித்துள்ளது.