ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

by Staff Writer 15-03-2022 | 8:27 PM
Colombo (News 1st) தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்கி, ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ''நாடு நாசம் - இது போதும்'' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கை செலவிற்கு நிரந்த தீர்வினை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் விடுக்கும் வகையில் இந்த கண்டன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு P.D.சிறிசேன விளையாட்டரங்கு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் இருந்து இரண்டு பேரணிகள் ஆரம்பமாகின. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். காலி முகத்திடலுக்கு செல்லும் வழியில் அலரி மாளிகைக்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி சென்று அங்கும் எதிர்ப்பில் ஈடுபட்டனர். தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்தனர். எனினும், பொலிஸார் அதனை தடுத்தனர். இதன்போது, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.