கடன் கோரி நிதி அமைச்சர் இந்தியா சென்றார்

எண்ணெய், மருந்து கொள்வனவிற்கு கடன் கோரி நிதி அமைச்சர் இந்தியா சென்றார்

by Staff Writer 15-03-2022 | 8:50 PM
Colombo (News 1st) உணவு மற்றும் மருந்து கொள்வனவு செய்வதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகலவும் இன்று இந்தியாவிற்கு சென்றனர். அடுத்த இரண்டு நாட்களில் இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து, இந்த கடன் வசதி தொடர்பில் கலந்துரையாடல்களை இவர்கள் நிறைவு செய்யவுள்ளனர். ஏற்கனவே எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடன் வசதியை இந்தியா வழங்கியுள்ளதுடன், இதற்கு முன்னரும் நாணய மாற்று வசதி திட்டத்தின் கீழ் 400 மில்லியன் டொலரையும் கடன்களை மீள செலுத்துவதற்காக 500 மில்லியன் டொலரையும் இந்தியா வழங்கியிருந்தது. ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை மருந்து மற்றும் உணவு கொள்வனவு செய்வதற்காக வழங்குவதற்கு இந்தியா தயாராகி வருகின்ற நிலையில், மற்றுமொரு புறத்தில் அவர்கள் தீர்மானமிக்க பல உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான சம்பூர், பூநகரி பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்திலும் மூன்று இடங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் என்ற பெயரில் உடன்படிக்கை மூலம் இந்திய நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை எண்ணெய் குதங்களின் பெரும் பகுதியும் இந்திய கூட்டு தொழில் முயற்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் பெறுமதிமிக்க முனையமொன்றை இந்தியாவின் அதானி நிறுவனம் கைப்பற்றியுள்ளதுடன், பலாலி விமான நிலையம், திருகோணமலை துறைமுகம் தொடர்பிலும் அவர்கள் கரிசனை செலுத்தியுள்ளனர். இலங்கையின் பெறுமதியான வளங்களின் உரிமைகளை கைப்பறிக்கொண்டு இந்தியா அன்றாட செலவுகளுக்காக இலங்கைக்கு கடன் வழங்குகின்றமை இதன்மூலம் உறுதியாகின்றது. இந்தியாவுடன் அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்று வருகின்றபோது சீனாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் கடந்த வார இறுதியில் திடீரென கலந்துரையாடப்பட்டிருந்தது. ஜப்பான், சீனா, மத்திய கிழக்கு நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு கூடிய சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே அதிகளவிலான பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்ற எமது நாட்டின் வர்த்தகத்துறைக்கு இதன் மூலம் அதிக தாக்கம் ஏற்படலாம் என்பது நிபுணர்களின் கருத்தாகும். கொழும்பு துறைமுக நகரத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விசேட சட்டத்தின் கீழ் நிர்வகிப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்கனவே சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கிய பங்குகளும் உடன்படிக்கை மூலம் சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பின்புலத்தின் கீழ் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் ஊடாக தான்தோன்றித்தனமான நிலைமை உருவாகுமா என்ற சந்தேகத்தையும் நிபுணர்கள் முன்வைத்துள்ளனர். உரிய முகாமைத்துவமின்றி உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சீனாவிடமும் இந்தியாவிடமும் எண்ணெய், உணவு மற்றும் மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்காக பணம் பெறுக்கொள்வதன் மூலம் இறுதியில் நாட்டின் பெறுமதியான வளங்களை இழக்க நேரிடுமா?