பொன் அணிகளின் போர்: புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி

by Staff Writer 12-03-2022 | 9:57 PM
Colombo (News 1st) 105 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட பொன் அணிகளின் போரில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி பெற்றது. நேற்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இனிங்ஸில் பதிலளித்தாடிய பத்திரிசியார் கல்லூரி அணி 08 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் நாளாட்டம் நிறைவிற்கு வந்தது. துடுப்பாட்டத்தில் எஸ். கீர்த்தனன் 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இன்று முதல் இனிங்ஸைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பந்துவீச்சில் யாழ்ப்பாண கல்லூரி அணி சார்பில் பீ.பிரிந்தன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதனையடுத்து, இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண கல்லூரி 84 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அணியின் சார்பில் பீ.பிரதீப் 25 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பத்திரிசியார் கல்லூரி சார்பில் S. அபிஸன் 6 விக்கெட்களை வீழ்த்தினார். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் வெற்றியிலக்காக 26 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களைப் பெற்று அந்த அணி வெற்றியீட்டியது. N.சகுஸ்டிகன் 16 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார். போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் சிறந்த பந்துவீச்சாளராகவும் புனித பத்திரிசியார் கல்லூரியின் A.F.டெஸ்வின் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த துடுப்பாட்ட வீரராக பத்திரிசியார் கல்லூரியின் S.கீர்த்தனனும், சிறந்த சகலதுறை வீரராக யாழ்ப்பாண கல்லூரியின் பீ.பிரிந்தனும் தெரிவாகினர். சிறந்த களத்தடுப்பாளராக பத்திரிசியார் கல்லூரியின் ஜெ. ஜெஸ்டிகன் தெரிவானார்.