கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நிறைவு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நிறைவு

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2022 | 8:25 pm

Colombo (News 1st) கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (12) நடைபெற்றது.

புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவிற்கான ஆரம்ப நிகழ்வாக நேற்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து திருச்சிலுவைப்பாதை தியானத்துடன், திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இரவு வேளையில் திவ்விய நற்கருணை பவனி இடம்பெற்று ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

இன்று காலை 5.45 அளவில் திருச்செபமாலை ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து காலை 7 மணியளவில் திருவிழா திருப்பலி ஆரம்பமானது.

யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் மற்றும் இராமேஸ்வரம் பங்குத்தந்தை F.தேவசகாயம் அடிகளார் தலைமையில் கூட்டுத் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியில் நெடுந்தீவு பங்குத்தந்தை , இலங்கை கடற்படையின் வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா , முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களுடன் அனுமதிக்கப்பட்ட இலங்கை , இந்திய பக்தர்களும் திருவிழா திருப்பலியில் பங்கேற்றிருந்தனர்.

திருப்பலியை தொடர்ந்து புனித அந்தோனியார் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

வருடாந்த திருவிழா நிறைவுற்றதையடுத்து, இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் கச்சத்தீவில் இருந்து விடைபெற்றனர்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவலாயல திருவிழாவில் இலங்கையிலிருந்து 100 பக்தர்களும் இந்தியாவிலிருந்து 100 பக்தர்களும் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்