பாண், கோதுமை மா, உணவுப் பொதி விலை அதிகரிப்பு 

by Staff Writer 11-03-2022 | 3:03 PM
Colombo (News 1st) நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலையை லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது. இதற்கமைய, ஒரு லிட்டர் டீசலின் விலை 75 ரூபாவாலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 110 ரூபா முதல் 130 ரூபாவிற்கு இடையில் அமையவுள்ளது. இன்றைய ஊடக சந்திப்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன இந்த விடயத்தை அறிவித்தார். இதேவேளை, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபா தொடக்கம் 45 ரூபாவிற்குள் அதிகரிக்கப்படுமென பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சமைத்த உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொதி ஒன்றின் விலையை 20 ரூபாவாலும், கொத்து ஒரு பார்சலின் விலையை 10 ரூபாவாலும், சிறு உணவுப்பொருட்களின் விலையை 05 ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. முச்சக்கரவண்டியின் முதல் 1 கிலோ மீட்டருக்கான கட்டணத்தை 80 ரூபாவால் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, விமான பயணச்சீட்டுகளின் விலை 27% அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால், விமான பயணச்சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விமான பயணச்சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.