500 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

இலங்கைக்கு மீண்டும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

by Staff Writer 11-03-2022 | 8:24 PM
Colombo (News 1st) இலங்கையில் எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்தியா தயாராகி வருகின்றது. இதற்கமைய, இந்தியாவின் EXIM வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ளது. இந்த கடன் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்படும் முதலாவது எண்ணெய் தொகை இந்த மாதம் 15 ஆம் திகதி கிடைக்கவுள்ளது. 500 மில்லியன் டொலரில் 75 வீதத்தை இந்தியாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என இந்திய EXIM வங்கி தெரிவித்துள்ளது. 25 வீதத்தை மூன்றாவது தரப்பிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த முடியும். இந்த கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை 12 மாதங்களை விட நீடிக்க முடியாது என இந்திய EXIM வங்கி தெரிவித்துள்ளது. இந்தியா ஏற்கனவே அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக வழங்கிய 500 மில்லியன் டொலர் கடன் , 400 மில்லியன் டொலருக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ள பின்புலத்திலேயே இந்தியா இந்த கடன் தொகையை வழங்குகின்றது. மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர் அடுத்து வரும் சில வாரங்களில் இந்தியா செல்லவுள்ளார். இதேவேளை, இந்தியா கடனை வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாக அண்மையில் தகவல் வௌியானது.