ஒரு சில வங்கிகளில் அதிகரித்துள்ள டொலரின் பெறுமதி

by Staff Writer 10-03-2022 | 2:07 PM
Colombo (News 1st) மத்திய வங்கி அறிமுகப்படுத்திய நெகிழ்வுப்போக்குடன் கூடிய நாணய மாற்று கொள்கைக்கு அமைய, சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 260 ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கை வங்கியின் இன்றைய(10) நாணய மாற்று வீதத்திற்கு அமைய அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 225 ரூபா 50 சதமாகவும் விற்பனை பெறுமதி 230 ரூபாவாகவும் காணப்படுகின்றது. ⭕ கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 248 ரூபா 34 சதமாகவும் விற்பனை பெறுமதி 260 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. ⭕ ஹட்டன் நெஷனல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 250 ரூபாவாகவும் விற்பனை விலை 260 ரூபாவாகவும் காணப்படுகின்றது. ⭕ சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 248 ரூபா 63 சதமாகவும் விற்பனை விலை 260 ரூபாவாகவும் காணப்படுகின்றது. ⭕ மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 248 ரூபா 29 சதமாகவும் விற்பனை விலை 259 ரூபா 99 சதமாகவும் காணப்படுகின்றது. இதனிடையே, வௌிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலருக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி அமைச்சு உத்தேசித்துள்ளது. வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அமெரிக்க டொலரொன்றுக்கு மேலதிகமாக 20 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக, பணியாளர்கள் பணப்பரிமாற்றத்தினூடாக காப்புறுதிக்கு மேலதிகமாக ஆதாயமொன்றை பெறும் சந்தர்ப்பம் உதயமாகியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வௌிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பிவைக்கும் ஒவ்வொரு டொலருக்கும் 38 ரூபா வீதம் ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்று முன்தினம்(08) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், வௌிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எதிர்காலத்தில் தீர்மானிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நேற்று(09) முன்தினம் உரிமம் பெற்ற வங்கிகளின் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.