ஏப்ரல் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு லிட்ரோ நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிப்பு 

ஏப்ரல் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு லிட்ரோ நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிப்பு 

ஏப்ரல் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு லிட்ரோ நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2022 | 5:54 pm

Colombo (News 1st) ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்.பீ சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையினால் உயிரிழந்த பெண்ணின் உறவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக இவர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லபார் தாஹிர் மற்றும் எஸ்.யூ.பீ.கரலியத்த ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரில் Butane 70%, Propane 30% அடங்க வேண்டியது கட்டாயம் என்ற நிலையில், எரிவாயு நிறுவனத்தினால் Butane 50%, Propane 50% உள்ளடக்கப்பட்டு, எரிபொருள் சேர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சேர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதால், வெடிப்பு உள்ளிட்ட ஆபத்தான நிலை ஏற்படக்கூடுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் துஷான் குணவர்தன, துறைசார் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

எனினும், அதனை கருத்திற்கொள்ளாமல் எரிவாயு நிறுவனத்தால் சேர்மானத்தின் அளவு மாற்றப்பட்டு சந்தைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்