அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கும் அறிகுறி

by Staff Writer 10-03-2022 | 7:44 PM
Colombo (News 1st) நாணய மாற்று வீதத்தை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைய நெகிழ்வுப் போக்குடன் தீர்மானிப்பதற்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, இன்று (10) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபா வரை அதிகரித்திருந்தது. சுமார் ஒரு வருடமாக டொலர் பெறுமதியை 202 ரூபா என்ற அளவில் நிலையாக பேணியதையடுத்து, இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் நாணய மாற்று வீதம் சுதந்திரமாக தீர்மானிக்கப்படுவதற்கு இடமளித்தது. நாணய மாற்று வீதம் நெகிழ்வுப்படுத்தப்பட்டதன் பின்ர் அரச வங்கிகளில் டொலரின் விற்பனை விலை நேற்று 230 ரூபா வரை அதிகரித்தது. எனினும், இன்று டொலரின் விற்பனை விலை 260 ரூபாவக பதிவாகியது. நாணய மாற்று வீதத்தை செயற்கையாக நிலையாகப் பேண மத்திய வங்கி நடவடிக்கை எடுத்தமையால், இலங்கைக்கு கிடைக்கும் டொலரின் அளவும் வெகுவாகக் குறைவடைந்தது. இதற்குத் தீர்வாக வௌிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பி வைக்கும் டொலர் மற்றும் ஏற்றுமதி வருமானத்தின் மூலம் கிடைக்கும் டொலருக்கு மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவை அரசு அறிவித்தாலும், எதிர்பார்க்கப்பட்டவாறு டொலர்கள் நாட்டை வந்தடையவில்லை. நாணய மாற்று வீதத்தை நெகிழ்வுத்தன்மையுடன் தீர்மானிக்க இடமளிப்பதாக மத்திய வங்கி அறிவித்தமையைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வௌிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர்கள் தொடர்பில் சிக்கல் நிலை எழுந்துள்ளது. நேற்று முன்தினம் நாணய மாற்று வீதம் சுதந்திரமாக தீர்மானிக்கப்படுவதற்கு இடமளிப்பதாக மத்திய வங்கி அறிவிக்கும் முன்னர் கூடிய அமைச்சரவை வௌிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பி வைக்கும் டொலருக்கு வழங்கப்படுகின்ற விசேட கொடுப்பனவை 38 ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனினும், நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்ற டொலருக்காக வழங்கப்பட்டு வந்த 10 ரூபா கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டதாக அனுமதிப்பத்திரம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் கடிதம் மூலம் அறிவித்தார். இது இவ்வாறிருக்க வௌிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பி வைக்கும் டொலருக்கு 20 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு நேற்றிரவு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று முரணான இந்த அறிவிப்புகள் காரணமாக சந்தையில் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இரண்டு நாட்களுக்குள் டொலரொன்றின் விலை 58 ரூபாவால் அதிகரித்துள்ளது. இது 29% அதிகரிப்பாகும். டொலரின் விலை அதிகரிக்கும் போது இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கின்றமை வழமையாகும். டொலரின் விலை 260 ரூபாவாக நிலையாக இருக்கும் போது அரசாங்கம் வரிக்குறைப்பு அல்லது நிவாரணத்தை வழங்காத பட்சத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தது 29 ரூபாவால் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. இந்த நிலையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 51 ரூபாவாலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதேவேளை, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 824 ரூபாவால் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 44 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 101 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 45 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் ஏற்கனவே தயாராகியுள்ளது. இதற்கமைய, 400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட் விலை 120 ரூபாவால் அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, அத்தியாவசியமற்ற பொருட்கள் என தெரிவித்து ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட 367 பொருட்களுக்கு நேற்று அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஏனைய செய்திகள்