by Staff Writer 09-03-2022 | 6:04 PM
Colombo (News 1st) தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்தை விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப, தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சமர்ப்பித்திருந்தார்.
இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் ஆட்சேபனைகளை பதிவு செய்துகொள்ளுமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டமூலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தங்கள் சபையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலம் ஊடாக ஊடகத்திற்கு அழுத்தம் ஏற்படலாம் என பிரதானமாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அதிகார சபையொன்றை ஸ்தாபிக்கவும் அந்த அதிகார சபையூடாக சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி 10 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கும் ஏதுவாக அதிகாரங்கள் கிடைக்கும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் ஒன்றியம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், Transparency International அமைப்பு என்பன இந்த சட்டமூலத்தில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டிருந்தன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை பொருட்படுத்தாது செயற்படுவதற்கான சந்தர்ப்பமும் இதன் மூலம் உருவாகலாம் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.