Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் இன்று முற்பகல் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த கலந்துரையாடல் வெற்றிகரமாக நடைபெற்றதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
இந்த வாரம் இந்தியாவிற்கு 500 மில்லியன் டொலரை வழங்க வேண்டியிருந்தது. பொருட்களை பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டாக அது அமைந்திருந்ததுடன், ஜனவரி மாதத்தில் வழங்க வேண்டிய அந்த பற்றுச்சீட்டு மார்ச் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜனவரி, பெப்ரவரி மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட 400 மில்லியன் டொலரும் உள்ளது. அதனையும் இந்த வாரம் வழங்க வேண்டியிருந்தது. ஆகவே 900 மில்லியன் டொலர் வழங்க வேண்டியுள்ளது. அவர்கள் அதனை வௌிப்படையாக ஏற்றுக்கொள்ளாவிடினும் அவர்கள் கையில் அதற்கான நிதி இல்லை என்பதை கலந்துரையாடலின் மூலம் எம்மால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.