by Staff Writer 09-03-2022 | 6:19 PM
Colombo (News 1st) பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயங்களில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தை தமது அரசாங்கம் வலியுறுத்தும் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று (08) சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமெரிக்க தூதுவர் இதன்போது கேட்டறிந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் கூறினார்.
இலங்கையின் அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அமெரிக்கா வலியுறுத்தும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நம்பிக்கை வௌியிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையை இந்த சந்திப்பின் போது தாம் பாராட்டியதாகவும் அதற்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.