by Staff Writer 09-03-2022 | 4:32 PM
Colombo (News 1st) பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் அடங்கலாக 04 பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கிய நீதிமன்றம், லிட்ரோ, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை தரக்கட்டளைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயசிங்க ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகளால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் மற்றும் சம்பவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் இந்த அறிவித்தலை பிறப்பித்துள்ளனர்.
சிவில் செயற்பாட்டாளர் நாகானந்த கொடித்துவக்கினால் இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து தீர்ப்பு வழங்குவதற்காகவே மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமையால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினருக்கு இழப்பீட்டை வழங்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் இந்த மனுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் எழுத்தாணை மனுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.