வனிதாபிமான 2021 விருது வழங்கல் விழா: ஜனரஞ்சக பெண்ணாக உமாரியா சிங்ஹவன்ச தெரிவு

by Staff Writer 08-03-2022 | 8:55 PM
Colombo (News 1st) இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினமாகும். நாட்டின் துணிச்சல் மிகுந்த பெண்கள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இன்றைய சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வனிதாபிமான 2021 விருது வழங்கல் விழா நடைபெற்றது. நியூஸ்ஃபெஸ்ட் - NDB வங்கியுடன் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. வனிதாபிமான நிகழ்ச்சி கடந்த வருடத்தில் ஆரம்பமானது. நாட்டின் ஒவ்வொரு மாகாணங்களிலும் 10 போட்டிப் பிரிவுகளின் கீழ் வெற்றியீட்டிய துணிச்சல் மிக்க பெண்கள் தேசிய மட்ட போட்டிக்கு தகுதிபெற்றனர். அவர்களில் திறமையை வௌிப்படுத்திய 10 பெண்கள் தேசிய ரீதியில் இன்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனிடையே, குறித்த 10 துறைகளிலும் நிறுவன மற்றும் தொழில்சார் ரீதியில் திறமைகளை வௌிப்படுத்திய 10 பெண்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இம்முறை வனிதாபிமான விருது வழங்கல் விழாவில் வருடத்தின் ஜனரஞ்சக பெண்ணுக்கான விருதை பிரபல பாடகி உமாரியா சிங்ஹவன்ச வெற்றிகொண்டார். 1.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி பயிற்றுவிப்பு அதிகாரியான புஷ்பா ரம்யானி டி சொய்சா 2. நடிகை ஷலனி தாரகா 3. பாடகி ஷஷிக்கா நிசன்சலா 4.பாடகி உமாரியா சிங்ஹவன்ச 5. பாடகி யொஹானி டி சில்வா ஆகியோர் வருடத்தின் ஜனரஞ்சக பெண்ணுக்கான இறுதிப் போட்டிக்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை, சமூக மேம்பாட்டிற்காக பணியாற்றிய ஐவருக்கு வனிதாபிமான வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல நடிகை மாலினி பொன்சேகா, பிரபல பாடகி கலாநிதி சுஜாதா அத்தநாயக்க, பேராசிரியர் மாலனி எதகம, பிரபல எழுத்தாளர் அனுலா டி சில்வா, சர்வதேச சிவில் செயற்பாட்டாளர் ஜயத்மா விக்ரமநாயக்க ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. திறமையான ஆயிரக்கணக்காக பெண்கள் மத்தியில், மனிதவலு மற்றும் தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல பெர்னாண்ன்டோ தலைமையிலான பிரபல நடுவர் குழாத்தினரால் சாதனைப் பெண்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.