12 நாட்களில் 17 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்

உக்ரைனில் இருந்து 12 நாட்களில் 17 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்: ஐ.நா தகவல்

by Bella Dalima 08-03-2022 | 5:38 PM
Colombo (News 1st) உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் இலட்சக்கணக்கானோர் குவிந்துள்ளார்கள். இந்நிலையில், உக்ரைனில் கடந்த 24 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து 12 நாட்களில் 17, 35,000 பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி ட்விட்டரில், ‘உக்ரைனில் இருந்து 12 நாட்களில் 17 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார். இதில் ஐந்தில் மூன்று பங்கு, அதாவது கிட்டத்தட்ட 10,30,000 பேர் போலந்து சென்றதாகவும், 1,80,000 பேர் ஹங்கேரிக்கும், 1,28,000 பேர் ஸ்லோவாக்கியாவிற்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் உக்ரைன் அகதிகளின் வருகை கணிசமாக உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.