நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான  11 இந்திய மீனவர்கள் விடுதலை 

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான  11 இந்திய மீனவர்கள் விடுதலை 

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான  11 இந்திய மீனவர்கள் விடுதலை 

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2022 | 3:18 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவரி 07 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பினுள் இழுவைமடி பயன்பாடு, கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி இலங்கை கடலில் தொழிலில் ஈடுபட்டமை மற்றும் வலைகளை தொடக்கறுத்து வைக்காமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 6 மாதங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை மீள கையளிக்குமாறு இதன்போது, ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களின் மூன்று படகுகள் தொடர்பான உரிமை கோரிக்கைக்கான விசாரணை , எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களையும் மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினூடாக அவர்களை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் 36 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் 11 படகுகளும் பெப்ரவரி மாதம் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்