விமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தீர்மானம்

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க தீர்மானம்

by Staff Writer 07-03-2022 | 2:52 PM
Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தினம், வீதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவை இன்று(07) பிறப்பித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, மொஹமட் முஸம்மில், வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இன்று(07) நீதிமன்றில் ஆஜராகினர். குறித்த வழக்கு இன்று(07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கறுவாத்தோட்டம் பொலிஸார் வழக்கு விசாரணைக்கு வேறு திகதியை வழங்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின் போது வீதியை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.