by Staff Writer 07-03-2022 | 8:09 PM
Colombo (News 1st) மாகம்புர லங்கா கைத்தொழில் பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான லங்வா சங்ஸ்தாவின் சீமெந்து உற்பத்தி செயற்பாடுகள் இன்று(07) ஆரம்பிக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
புதிய சீமெந்து தொழிற்சாலையை திரை நீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பின்னர் தொழிற்சாலையை பார்வையிட்டனர்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
63 ஏக்கர்களை கொண்ட நிலப்பரப்பில் இந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வருடாந்தம் 04 மில்லியன் மெட்ரிக் தொன் சீமெந்து உற்பத்தி கொள்ளளவை இது கொண்டுள்ளது.
இதன் முதற்கட்டத்தில் 2.8 மில்லியன் மெட்ரிக் தொன் அளவு சீமெந்தை உள்நாட்டு சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய உருக்குக்கம்பி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று(07) நடைபெற்றது.
250 ஏக்கர்கள் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படுகின்ற உருக்குக்கம்பி தொழிற்சாலைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.
இதன் தயாரிப்பு பணிகள் 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.