by Staff Writer 07-03-2022 | 7:23 PM
Colombo (News 1st) மாலைதீவில் உயிரிழந்த இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று(07) நல்லடக்கம் செய்யப்பட்டது.
மன்னார் சேமக்காலையில் அமைந்துள்ள பொது மயானத்தில் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று(07) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட பியூஸ்லஸின் பூதவுடலுக்கு மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கால்பந்தாட்ட அணியின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, பியூஸ்லஸின் பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
பியூஸ்லஸின் பூதவுடல் நல்லடக்கத்தையொட்டி மன்னார் பஜார் பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று(07) மூடப்பட்டிருந்தன.
அன்னாரின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை கால்பந்தாட்ட அணியில் 2020 ஆம் ஆண்டு இடம்பிடித்த யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ், திறமை வாய்ந்த பின்கள வீரராவார்.
மன்னார் - பனங்கட்டி கொட்டு கிராமத்தில் பிறந்த அவர், ஆரம்ப நாட்களில் வென்னப்புவ நியூ யங்ஸ் கால்பந்தாட்ட கழகத்துக்காக விளையாடியுள்ளார்.
சர்வதேச மட்டத்தில் ஆற்றல்களை வௌிப்படுத்தியதன் மூலம் பியூஸ்லஸூக்கு மாலைதீவுகளின் வெலன்ஸியா கழகத்துக்காக விளையாடும் வாய்ப்பு கிட்டியது.
மாலைதீவுகளின் திவேஹி பிரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் வெலன்ஸிய கழகத்துக்காக விளையாடிய அவர், கடந்த மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை தாம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.