ஷேன் வார்னுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை

ஷேன் வார்னுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை; கறுப்பு பட்டியணிந்து வீரர்கள் இரங்கல்

by Bella Dalima 05-03-2022 | 7:24 PM
Colombo (News 1st) மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னின் இறுதிக்கிரியைகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து ஜாம்பவானுமான ஷேன் வார்ன் தனது 52 ஆவது வயதில் நேற்று காலமானார். தாய்லாந்திலுள்ள தமது ஓய்வில்லத்தில் இருந்த போது அவர் மாரடைப்பால் மரணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஷேன் வார்னின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1969 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பிறந்த ஷேன் வார்ன் 1992 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றார். அவுஸ்திரேலிய அணிக்காக 15 வருடங்கள் விளையாடிய வார்ன், 145 டெஸ்ட் போட்டிகளில் 708 டெஸ்ட் விக்கட்களை வீழ்த்தியுள்ளதுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவராவார். 600 டெஸ்ட் விக்கட்களை கைப்பற்றிய முதலாவது வீரர் என்ற பெருமையை கொண்டுள்ள ஷேன் வோர்ன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கட்களை கைப்பற்றிய இரண்டாவது வீரராவார். அவுஸ்திரேலியா சார்பில் சர்வதேச ஒரு நாள் அரங்கில் அதிக விக்கட்கள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை வார்ன் தன்னகத்தே கொண்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட IPL தொடரில் ஷேன் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சம்பியனானதும் நினைவுகூரத்தக்கது. விவியன் ரிச்சர்ட்ஸ் , சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ரிக்கி பொண்டிங், முத்தையா முரளிதரன், சனத் ஜயசூரிய உள்ளிட்ட அனைத்து கிரிக்கட் ஜாம்பவான்களும் ஷேன் வார்னின் மறைவிற்கு இரங்கல் வௌியிட்டு வருகின்றனர். இதனிடையே, அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் மற்றும் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அனைத்து வீரர்களும் இன்று கறுப்பு பட்டி அணிந்து விளையாடியிருந்தனர்.