மின்வெட்டு குறைக்கப்படலாம்

மின்வெட்டு குறைக்கப்படலாம்: பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு 

by Staff Writer 05-03-2022 | 4:05 PM
Colombo (News 1st) இன்று (05) முதல் மின்வெட்டு குறைக்கப்படுமென அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருளின் அளவைப் பொறுத்து மின்வெட்டு தவிர்க்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்றும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நேற்று வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய P, Q, R, S, T, U, V, W பகுதிகளில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரை மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. குறித்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இரவு வேளையில் ஒரு மணித்தியாலத்திற்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. E மற்றும் F பகுதிகளில் காலை 8.30-க்கும் மாலை 4.30-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பகுதிகளில் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை (06) A, B, C வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, நேற்று (04) நாட்டை வந்தடைந்த கப்பலில் உள்ள டீசலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் 28,300 மெட்ரிக் தொன் டீசல் உள்ளது.