உக்ரைனின் இரண்டு நகரங்களில் போர் நிறுத்தம்; மேற்கத்திய நாடுகளை குற்றம் சாட்டும் பெலாரஸ் அதிபர்

உக்ரைனின் இரண்டு நகரங்களில் போர் நிறுத்தம்; மேற்கத்திய நாடுகளை குற்றம் சாட்டும் பெலாரஸ் அதிபர்

உக்ரைனின் இரண்டு நகரங்களில் போர் நிறுத்தம்; மேற்கத்திய நாடுகளை குற்றம் சாட்டும் பெலாரஸ் அதிபர்

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2022 | 5:29 pm

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவின் தாக்குதல் இன்று 10 ஆவது நாளாக தொடர்கிறது.

ரஷ்யா தற்போது வான், கடல், தரை ஆகிய மும்முனை தாக்குதலில் ஆக்ரோ‌ஷமாக ஈடுபட்டு வருகிறது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்ய இராணுவம் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைனின் இரண்டு நகரங்களில் போர் நிறுத்தம் 

இந்நிலையில், ரஷ்யா இன்று (05) உக்ரைனில் இரண்டு நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில், பொதுமக்கள் வெளியேறுவதற்கான மீட்பு பணிகளுக்காக போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போர் நிறுத்தம் இன்று பகல் 11 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில் குறித்த இரண்டி நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.   அந்த இரண்டு நகரங்களில் இருந்தும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா குடியிருப்பு பகுதிகளிலும் குண்டுகள் வீசுவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அதை ரஷ்ய அதிபர் புதின் மறுத்துள்ளார்.

ஜெர்மனி அதிபர் Olaf Scholz-உடன் ரஷ்ய அதிபர் புதின் நேற்று (04) தொலைபேசியில் பேசிய போது, உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தவில்லை என்றும் குடியிருப்பு கட்டிடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிராக போரிட நாடு திரும்பியுள்ள 66,000 உக்ரைன் ஆண்கள்

நாட்டிற்காக போராட 66,000 ஆண்கள் வௌிநாடுகளிலிருந்து திரும்பியுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திரும்பியவர்களில் 56 வயதான கால்பந்து பயிற்றுவிப்பாளர் Yuriy Vernydub-உம் அடங்குகின்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் ரியல் மட்ரிட் அணியை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்த Sheriff Tiraspol அணியை இவரே வழிநடத்தியிருந்தார்.

ரஷ்யா தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாக தனது மகன் தொலைபேசியில் தெரிவித்த போது, நாட்டிற்குத் திரும்பி ரஷ்யாவிற்கு எதிராக போராட வேண்டுமென தான் தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.

NATO அமைப்பிற்கு உக்ரைன் அதிபர் கண்டனம்

தங்கள் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி NATO அமைப்பிடம் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy கோரிக்கை விடுத்தார்.

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை என NATO அறிவித்தால் பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எவ்வித விமானங்களும் உக்ரைன் வான் பரப்பில் பறக்கக் கூடாது. இது ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும். தடையை மீறும் எந்த விமானங்களையும் NATO படைகள் சுட்டு வீழ்த்தலாம். ஆனால், உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை NATO அமைப்பு நிராகரித்துள்ளது.

இந்நிலையில், தமது கோரிக்கையை நிராகரித்த NATO அமைப்பிற்கு உக்ரைன் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளை குற்றம் சாட்டும் பெலாரஸ் அதிபர்

பெலாரஸ் அதிபர் Alexander Lukashenko மேற்கத்திய நாடுகள் தான் ரஷ்யாவையும் பெலாரசையும் உக்ரைன் மீதான போருக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவிற்கு பெலாரஸ் ஆதரவளித்து வருகிறது. இந்த நிலையில், பெலாரஸ் அதிபர், ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின் போது உக்ரைன் உடனான மோதல் குறித்தும், அதில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த Alexander Lukashenko, மேற்கத்திய நாடுகள்தான், ரஷ்யாவையும் பெலாரசையும் உக்ரைன் மீதான போருக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யா மீது தடைகளை அமுல்படுத்தும் சிங்கப்பூர்

உக்ரைன் மீதான போருக்கு எதிராக ரஷ்யா மீது தடைகளை அமுல்படுத்தவுள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரினால் மேற்கொள்ளப்படும் மிகவும் அரிதான நகர்வாக இது கருதப்படுகின்றது.

உலகின் முக்கியமான பணப்பரிமாற்ற மையமான சிங்கப்பூர், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதுடன், குறிப்பிட்ட சில ரஷ்ய வங்கிகளின் நிதிப்பரிமாற்றத்தை இலக்கு வைத்து தடைகளை அமுல்படுத்தவுள்ளது.

மேலும் cryptocurrency பரிமாற்றத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதுடன், ரஷ்ய மத்திய வங்கிக்கு உதவியாக அமையக்கூடிய நிதி நிறுவனங்களின் சேவைகளுக்கும் சிங்கப்பூர் தடை விதிக்கவுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கும் நாடுகளைப் போலவே, தமது நாடும் தடைகளை அமுல்படுத்த விரும்புவதாக சிங்கப்பூர் வௌிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் முன்னர் தெரிவித்திருந்தார்.

குறித்த பிராந்தியத்தில் ரஷ்யாவிற்கு எதிராக தடைகளை விதிக்கும் முதலாவது நாடாக சிங்கப்பூர் பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்