இரண்டு டீசல் கப்பல்கள் அடுத்த வாரம் வரவுள்ளன

இரண்டு டீசல் கப்பல்கள் அடுத்த வாரம் வரவுள்ளன

இரண்டு டீசல் கப்பல்கள் அடுத்த வாரம் வரவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2022 | 4:20 pm

Colombo (News 1st) டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் அடுத்த வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளன.

குறித்த கப்பல்களில் 37,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்டுவரப்படுவதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த எரிபொருள் இறக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனிடையே, நேற்று (04) மாலை நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்த டீசல் மாதிரியை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று காலை டீசல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கப்பலிலுள்ள எரிபொருளை இறக்கும் நடவடிக்கை இன்று மாலை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளைய, எரிபொருள் ஏற்றிய கப்பலொன்று நாளை அல்லது நாளை மறுதினம் நாட்டை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

துபாயில் இருந்து நாட்டை நோக்கி புறப்பட்டுள்ள குறித்த கப்பலில் 30,000 மெட்ரிக் தொன் எண்ணெய் கொண்டுவரப்படுகின்றது.

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலுள்ள 8000 மெட்ரிக் தொன் டீசலை, மின்சார உற்பத்திக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டீசல் மற்றும் பெட்ரோலுக்கான செலவீனம் தொடர்பில் எரிசக்தி அமைச்சிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

ஒரு லிட்டர் டீசலுக்கு மேலதிகமாக 50 ரூபாவும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மேலதிகமாக 20 ரூபாவும் அறவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலைக்கேற்ப இந்த நிலை மாற்றமடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்