ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கத்தில் அமைச்சு பதவியை ஏற்கத் தயாரில்லை: விமல் வீரவன்ச

by Staff Writer 04-03-2022 | 3:18 PM
Colombo (News 1st) அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கொழும்பில் இன்று (04) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர். உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ள பின்புலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால திட்டமொன்று, 11 கட்சிகளாலும் நேற்று முன்வைக்கப்பட்டது. இந்த திட்டம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்சவும் எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த உதய கம்மன்பிலவும் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களை பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாரில்லையென விமல் வீரவன்ச இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இதனிடையே, அமைச்சரவையின் பொறுப்புகளை தம்மால் வகிக்க முடியாதென நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் உதய கம்பன்பில இன்று முற்பகல் எரிசக்தி அமைச்சிற்கு சென்று அலுவலக பணியாளர்களையும் அமைச்சின் அதிகாரிகளையும் சந்தித்தார்.