யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்குகள் விசாரணையின்றி தள்ளுபடி

யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்குகள் விசாரணையின்றி தள்ளுபடி

யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்குகள் விசாரணையின்றி தள்ளுபடி

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2022 | 3:30 pm

Colombo (News 1st) யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்காவின் New Fortress  நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, L.T.B. தெஹிதெனிய, புவனேக்க அலுவிஹாரே, விஜித் மலல்கொட மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர் குழாம் விரும்பவில்லையென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த மனுக்களுக்கு சார்பாக, உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைத்துள்ளனர்.

மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை சார்பாக சட்டமா அதிபர் மன்றில் முன்னிலையானதுடன் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் பிரத்தியேக சட்டத்தரணியாக உதித்த இஹலஹேவா முன்னிலையாகியிருந்தார்.

யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்கு சொந்தமான பங்கை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த அடிப்படை உரிமை மனுக்கள் எவ்வித சட்ட அடிப்படையும் இன்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யுமாறு ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாமிடம் சட்டமா அதிபர் கோரியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்