நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்-ரவூப் ஹக்கீம் சந்திப்பு

சிறுபான்மை மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரிடம் ரவூப் தெரிவிப்பு

by Staff Writer 03-03-2022 | 6:06 PM
Colombo (News 1st) யுத்தத்தின் பின்னர் சிறுபான்மை மக்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்  Michael Appleton-இடம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இலங்கைக்கும் மாலைத்தீவிற்குமான நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகர்  Michael Appleton ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை நேற்று பிற்பகல் சந்தித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதனூடாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் பதிலாக அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக ரவூப் ஹக்கீம்  சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி சிறுபான்மை சமூகத்தின் அநேகமானோர் போதிய சாட்சியங்கள் இன்றி கைது செய்யப்பட்டு வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அனைத்தும் மர்மமாகவே இருப்பதாக ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இதனிடையே, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் Umar Farooq Burki-ஐ ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஏனைய செய்திகள்