ஆயுதமேந்தாத தமிழ் மக்கள் பழிவாங்கலை நாடவில்லை

ஆயுதமேந்தாத தமிழ் மக்கள் பழிவாங்கலை நாடவில்லை: சம்பந்தன் அறிக்கை

by Staff Writer 03-03-2022 | 5:07 PM
Colombo (News 1st) இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த அறிக்கைக்கான இலங்கை அரசின் பதில் அறிக்கையும் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். நாட்டில் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காக பேரினவாதத்தை ஆதரிக்கும் கொள்கைகளை முன்னிறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், இந்த நிலை இலங்கைக்கு பாரிய பாதகங்களை கொண்டுவந்துள்ளதுடன் ஒருமித்த இலங்கை நாட்டின் மக்களை பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். உண்மை நிலைமையினை சிங்கள பௌத்த மக்களுக்கு எடுத்துக்கூறினால் அவர்கள் நிலைமையினை புரிந்துகொள்வார்கள் எனவும், ஒரு சில சிங்கள தலைவர்களை விட ஏனையவர்களுக்கு இதனை செய்வதற்கு தைரியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள வரலாறு காணாத பிரச்சினைக்கும் மீண்டெழுந்து வர முடியாத நிலைமைக்கும் இதுவே பிரதான காரணம் எனவும் தமிழ் ​தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதனிடையே, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமையினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுதமேந்தாத தமிழ் மக்கள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுகிறார்களே தவிர பழிவாங்கலை நாடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக அவர்கள் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மீள் நிகழாமை போன்றவற்றை உறுதி செய்யுமாறே வேண்டுகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளமையினால் அவற்றை நடைமுறைப்படுத்துவது நாட்டின் பொறுப்பு எனவும் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். ஆனால், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இத்தகைய நிலைமை இல்லாத நிலையில், அரைவாசிக்கும் மேலதிகமானவர்கள் கடந்த தசாப்தங்களில் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால், செழுமையான மொழியையும் கலாசாரத்தினையும் நாகரீகத்தினையும் பாரம்பரியத்தினையும் கொண்ட தமிழ் மக்கள் இலங்கையில் இல்லாமல் போய்விடுவார்கள் எனவும் அவர் அச்சம் வௌியிட்டுள்ளார். தமிழ் மக்கள் தமது பூர்வீக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஒன்றிணைந்து பிரிவுபடாத இலங்கையில், அர்த்தமுள்ள அதிகார பிரயோகத்துடன் தொடர்ந்தும் வாழ விரும்புகிறார்கள் எனவும் இது உறுதி செய்யப்படவேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்