பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் அவசியம்: மிச்செல் பெச்சலட் வலியுறுத்தல்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் அவசியம்: மிச்செல் பெச்சலட் வலியுறுத்தல்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் அவசியம்: மிச்செல் பெச்சலட் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2022 | 4:35 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் (Michelle Bachelet) முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம் தொடர்பில் நாளைய (04) அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கினால், இலங்கையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நேற்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நேற்று பிற்பகல் சந்தித்துள்ளனர்.

இதன்போது, யுத்த குற்றங்கள் இலங்கையில் இடம்பெறவில்லை என்பதனை மனித உரிமை ஆணையாளருக்கு தெளிவுபடுத்தியதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தூதுக்குழுவிடம் கூறியதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள முயற்சி சிறந்தது என்ற போதிலும் மேலும் பல மாற்றங்கள் அவசியம் என மிச்செல் பெச்சலட் கூறியதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் தாம் மனித உரிமை ஆணையாளரை தௌிவுபடுத்தியதாகவும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறினார்.

இதனிடையே, இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடி தடை விதிக்க வேண்டும் எனவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க அதனை மீள் பரிசீலனை செய்து திருத்தம் மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சட்டம் மக்களின் உரிமைகள் , சுதந்திரத்திற்கு பாரிய ஆபத்தை விளைவித்துள்ளதாகவும் விசேடமாக சிறுபான்மை மக்களுக்கு இதன் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடித் தடை விதிக்க வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் தொடர்பான உதவிக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பயங்கரவாத சட்டத்தை மறுசீரமைப்பிற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் கடந்த மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், பிற பொறிமுறைகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உரிய வகையில் அதில் பின்பற்றப்படவில்லை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுபான்மை சமூகங்கள், அரசியல் அதிருப்தியாளர்களை இலக்கு வைப்பதற்கும், சித்திரவதைகள் மூலம் பொய்யான வாக்குமூலங்களை பெறுவதற்கும், நீண்டகால தன்னிச்சையான தடுப்பு காவலில் வைப்பதற்கும், 40 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத சட்டம் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமை நிபுணர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்