மோதலில் 30 சிறுவர்கள் உட்பட 136 பேர் பலி

ரஷ்யா - உக்ரைன் மோதல்: 30 சிறுவர்கள் உட்பட 136 பேர் பலி

by Bella Dalima 02-03-2022 | 5:39 PM
⭕ ரஷ்யா - உக்ரைன்  மோதலில் 136 பேர் பலி ரஷ்யா - உக்ரைன் மோதலில் இதுவரை 136 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 30 சிறார்களும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எறிகணை தாக்குதல்கள், வான்வழி தாக்குதல்கள் மற்றும் இதர குண்டுவெடிப்புகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடகப்பேச்சாளர் லிஸ் த்ரொஸ்ஸெல் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ரஷ்ய ஆக்கிரமிப்பினால் இதுவரை பொதுமக்கள் 352 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1684 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் இரண்டாவது பாரிய நகர் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதலானது மோசமான யுத்த குற்றம் என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy குற்றம் சுமத்தியுள்ளார். இதனிடையே, ரஷ்யாவின் "இனப்படுகொலை" பற்றிய உக்ரைனின் குற்றச்சாட்டுகள் குறித்து மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் பொது விசாரணை நடத்தப்படுமென ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ⭕ Kherson நகரையும் ஆக்கிரமித்த ரஷ்ய படை உக்ரைனின் Kherson நகர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனின் Kherson தெற்கின் முக்கிய பகுதி என உக்ரைன் தெரிவித்துள்ளதுடன், இதன் மூலம் உக்ரைனை நிர்மூலமாக்குவதே ரஷ்யாவின் இலக்கு என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புதின் உரிய விலை கொடுப்பதை வாஷிங்டன் உறுதிப்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சூளுரைத்துள்ளார். ⭕ உக்ரைனியர்களுக்கு புகலிடம் வழங்கும் ஜெர்மனி நாட்டை விட்டு வௌியேறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சமடையும் உக்ரைனியர்களுக்கு புகலிடம் வழங்கப்படவுள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. உக்ரைனியர்கள் புகலிட செயன்முறையினூடாக புகலிடம் கோரத் தேவையில்லையென ஜெர்மனியின் உள் விவகார அமைச்சர் Nancy Faeser தெரிவித்துள்ளார். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் 3 வருடங்களுக்கு புகலிடம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் தொழில் சந்தைக்கான உடனடி வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது. உக்ரைனின் எல்லைப்பகுதியிலுள்ள ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் போலந்து, ஹங்கேரி, ரோமானியா, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தஞ்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. ⭕ உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கும் நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள போலந்து, எஸ்டோனியா, லட்வியா போன்ற நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளன. பெல்ஜியம் 3,000 ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளையும் 200 டாங்கிகளையும் 3800 தொன் எரிபொருளையும் வழங்க முன்வந்துள்ளது. பிரிட்டன் 2,000 ஏவுகணை தடுப்பு ஆயுதங்களையும் ஜெர்மனி 1000 டாங்கிகள், 500 ஸ்டிங்கர் மெஷின்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளன. போலந்து, எஸ்டோனியா, லட்வியா போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு இராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளன. 50 கோடி யூரோ மதிப்பிலான ஆயுத உதவிகளை செய்ய அந்நாடுகள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ⭕ ஐ.நா. பொதுச்சபையில் போரை நிறுத்தக் கோரும் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில நாடுகள் மட்டுமே ஆதரவளித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுச்சபையின் சிறப்பு அவசரக்கூட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுச்சபையின் இந்த அவசரக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷ்யா உடனே போரை நிறுத்த வேண்டும். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று இரவு தொடங்கும் கூட்டத்தில் இறுதியாக பெலாரஸ் உட்பட 10 நாடுகளின் பிரதிநிதிகள் பேசவுள்ளனர். 120 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, போரை நிறுத்தக் கோரும் தீர்மானத்தின் மீது இன்று (02) வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் பொதுச்சபையின் பாதி உறுப்பினர்கள் வாக்கெடுப்பிற்கு முன்னதாக ஒரு வரைவு தீர்மானத்தில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் எந்த நாட்டிற்கும் வீட்டோ அதிகாரம் (Veto Power) கிடையாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்திருந்தது. ⭕ உக்ரைனின் அமைதிக்காக பிரார்த்திக்குமாறு பாப்பரசர் அழைப்பு சாம்பல் புதனையொட்டி உக்ரைனின் அமைதிக்காக பிரார்த்தனை செய்யுமாறு பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சாம்பல் புதனையொட்டி பாப்பரசர் பிரான்சிஸ் விடுத்துள்ள செய்தியில்,
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். வன்முறையின் கொடூரமான தீமைக்கு ஜெபம் மற்றும் உபவாசம் போன்ற கடவுளின் ஆயுதங்களால் பதில் கிடைக்கும் என்று இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்தார். இதனால் உக்ரைனின் அமைதிக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்
என குறிப்பிட்டுள்ளார்.