by Bella Dalima 02-03-2022 | 5:58 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிகை கட்டண வரி சட்டமூலத்திலிருந்து ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஓய்வூதிய நிதியம் உள்ளிட்ட 13 நிதியங்களை நீக்குவதாக சட்ட மா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த ஆவணத்தை உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்பிப்பதாக, சட்ட மாஅதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிஷிடர் ஜெனரல் விவேகா சிறிவர்தன குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு விவாதத்தின் போது இந்த திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல், உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு விவாதத்தின் போது மிகை கட்டண வரி சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் , ஓய்வூதிய நிதியம் ஆகியவற்றை மிகை கட்டண வரி சட்டமூலத்தில் உள்வாங்குவதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட 10 தரப்பினரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, A.H.M.D. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் , ஓய்வூதிய நிதியம் ஆகியவற்றை மிகை கட்டண வரி சட்டமூலத்தில் உள்வாங்குவதற்கு எதிராகவே தமது தரப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
மிகை கட்டண வரி சட்டமூலத்திலிருந்து குறித்த நிதியங்கள் நீக்கப்படுமாயின், தாம் அது தொடர்பில் திருப்தியடைவதாகவும், மனு தொடர்பில் விடயங்களை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.