46/1 பிரேரணை இலங்கைவாழ் மக்களுக்கு அர்த்தமற்றது: G.L. பீரிஸ் உரை

by Bella Dalima 01-03-2022 | 7:30 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (28) ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட எழுத்துமூல சமர்ப்பணம் தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது. இந்த நிலையில், வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் இன்றைய கூட்டத்தொடரில் உரையாற்றினார். மோதலின் பின்னர் நிலைமையை சீர்செய்வதற்கு முன்னேற்றகரமான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அதனை மேலும் முன்நோக்கி கொண்டுசெல்ல எதிர்பார்ப்பதாகவும்  G.L. பீரிஸ் தனது உரையில் குறிப்பிட்டார். அதற்காக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், சமூக நீதிக்கான உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பேரவை ஊடாக முன்வைக்கப்பட்ட 3 மீளாய்வுகளை பூர்த்தி செய்துள்ளோம். இதற்காக நாம் உள்நாட்டு , சர்வதேச பிரதிநிதிகளுடன் நேரடியான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். விசாரணைகளின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான வழக்குகளுடன் தொடர்புபடும் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற போதிலும், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்திற்கு அது தடையாக இருக்கக் கூடாதென நாம் நம்புகின்றோம். அதனை நோக்காகக் கொண்டு அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்று சமர்பிக்கப்பட்டது. அதனூடாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், இந்த பின்புலத்தில் சாட்சிகளை சேகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட 46/1 பிரேரணை இலங்கைவாழ் மக்களுக்கு அர்த்தமற்றதென நாம் மீண்டும் நினைவுப்படுத்துகின்றோம். அதன் மூலம் இலங்கையில் சமூகங்கள் பிளவுபட்டு பொருளாதாரம், அமைதி, நல்லிணக்கத்திற்கு சவால் ஏற்படும் என நினைக்கின்றோம்.
என G.L.பீரிஸ் தமது உரையில் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இதுவரை 8 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த பிரேரணைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடையும் வகையில், இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகின்றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததுடன், இலங்கை அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்த பிரேரணை வெற்றியீட்டியது. 2012 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளால் முதன்முதலாக பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டது. உள்ளக ரீதியில் பொறிமுறையினைக் கையாண்டு பொறுப்புக்கூறல், நல்லிணக்க பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டு இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 2013 ஆண்டு 22 ஆவது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரிலும், 2014 ஆம் ஆண்டு 25 ஆவது கூட்டத்தொடரிலும் இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல் என்ற பேரில் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளால் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளையும் இலங்கை அரசாங்கம் எதிர்த்தது. எனினும், இது தொடர்பில் நடத்தப்பட்ட இருவேறு வாக்களிப்புகளிலும் அதிகமான நாடுகள் குறித்த பிரேரணைகளுக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தன. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஐ.நா-வின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. இதனையடுத்து, வாக்கெடுப்பின்றி ஏகமனதாக குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 2017 ஆம் ஆண்டு 34 ஆவது கூட்டத்தொடரில், 2015 ஆம் ஆண்டின் பிரேரணை மீண்டும் 34 /1 என்ற பேரில் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு 40 ஆவது கூட்டத்தொடரில் குறித்த பிரேரணை மீண்டும் இரண்டு வருட காலத்திற்கு 40/1 என்ற பெயரில் நீடிக்கப்பட்டது. எனினும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பின்னர், 2015 ஆம் ஆண்டு அரச அனுசரணை வழங்கி 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நீடிக்கப்பட்ட பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதிலிருந்து முற்றாக விலகுவதாக அரசாங்கம் ஜெனிவாவிற்கு அறிவித்தது. இறுதியாக 2021 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக பிரிட்டன், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான பின்புலத்திலேயே இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை நாடு தொடர்பில் எந்தவொரு பிரேரணையும் கொண்டுவரப்படாத நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வௌியிட்ட 17 பக்க அறிக்கைக்கான நிலைப்பாட்டினை அரசாங்கம் அனுப்பியுள்ளது. நாளை மறுதினம் (03)  நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான விவாதத்தின் போது வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாக உரையாற்றவுள்ளார். அத்துடன் அமெரிக்கா, சீனா, இந்தியா, பின்லாந்து, ஆர்ஜெண்டீனா, பெல்ஜியம் , தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, தெதர்லாந்து, பாகிஸ்தான், சுவீடன், டென்மார்க், பிரித்தானியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் இம்முறை விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற ஏற்பாடாகியுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஜெனிவாவிற்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நாட்டின் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸூடன் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.