1000 ரூபா சம்பளம் இழுபறியில்; மீண்டும் கூட்டு ஒப்பந்தம்? 

1000 ரூபா சம்பளம் இழுபறியில்; மீண்டும் கூட்டு ஒப்பந்தம்? 

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2022 | 8:29 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்னமும் ஆக்கபூர்வமான தீர்வு கிடைக்கவில்லை.

சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை எதிர்த்து பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், சில தரப்பினர் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பள அதிகரிப்பைக் கோரி நீண்டகாலமாக தொழிற்சங்க போராட்டங்களையும் சாத்வீக போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என அவர்களது கோரிக்கை மாற்றமடைந்திருந்தது.

இந்த விடயம் தொடர்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

தொழில் அமைச்சரின் தலையீட்டுடன் சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை அடுத்து இரண்டு சட்டங்களுக்கு கட்டுப்பட முடியாது என கூறி பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டது.

இந்த தீர்மானம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு ஒரு வருடமாகின்ற நிலையில், இன்னமும் பல பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அந்த சம்பளம் முறையாகக் கிடைக்கவில்லை.

1000 ரூபா சம்பளத்திற்காக பல புதிய கட்டுப்பாடுகளை தோட்ட நிறுவனங்கள் விதித்துள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள சில சலுகைகளும் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை வௌியிட்டனர்.

இந்த நிலையில், மீண்டும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான கருத்துகள் மேலோங்க ஆரம்பித்துள்ளன.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அண்மையில் பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் 800 ரூபா சம்பளத்துடன் 100 ரூபா உற்பத்தி கொடுப்பனவும் 100 ரூபா வருகைக்கான கொடுப்பனவும் வழங்க அவர்கள் இணங்கியுள்ளதாகவும் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்புகளில் ஒன்றான இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரின் கருத்திற்கு பின்வருமாறு பதிலளித்திருந்தது.

நவீன முறையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சாத்தியப்படக்கூடிய வகையில் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு தயார். 1000 ரூபாவிற்கு குறையாமல் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

மக்கள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு தயார் என்ற நிலைப்பாட்டினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கனவே வௌிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு இதுவரை கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான நிலைப்பாட்டினை உறுதியாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், 800 ரூபா சம்பளத்துடன் 100 ரூபா உற்பத்தி கொடுப்பனவும் 100 ரூபா வருகைக்கான கொடுப்பனவும் வழங்க தாம் இணங்குவதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை அறிவித்துள்ளார்.

சம்பள நிர்ணய சபையின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையிலும் பேச்சுவார்த்தைக்கு அது தடையாக அமையாது என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்