உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் ஐரோப்பிய நாடுகள்

குண்டு மழை பொழியும் ரஷ்ய படையினர்; உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் ஐரோப்பிய நாடுகள்

by Bella Dalima 01-03-2022 | 4:44 PM
Colombo (News 1st) பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்கவுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த வி‌டயத்தில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க் செக் குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கவும் முன்வந்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதனிடை​யே, குண்டுகளை பொழிந்தும் ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று ஆறாவது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷ்யா பின்வாங்க தயாராக இல்லை. ரஷ்ய படை நடத்திய அதிரடி தாக்குதலில் 70 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகர் கீவ்விற்கும்- கார்கிவ்விற்கும் இடையே உள்ள வொக்டியார்கா நகரில் உக்ரைன் இராணுவத்தளம் உள்ளது. இதன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலிலேயே 70 உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில், பெலாரஸில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். போரை முடிவிற்கு கொண்டு வர உக்ரைன்- ரஷ்யா இடையே நேற்று (28) பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு இராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்ய தரப்பிற்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. பேச்சுவார்த்தைகள் ஐந்து மணி நேரம் நீடித்ததாக ரஷ்ய அதிபர் புதினின் உதவியாளரும் அந்நாட்டு தூதுக்குழு தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தில் அதிபர் Volodymyr Zelenskyy கையெழுத்திட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.