ஐ.நா கூட்டத்தொடரில் தமிழ் கட்சிகளின் பங்களிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்  தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா? 

by Staff Writer 01-03-2022 | 8:52 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இம்முறை தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா? இது தொடர்பில் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. ஐக்கிய நாடுகள் சபையின் 49 ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கூட்டத்தொடரில் 3 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் பதலளித்ததன் பின்னர் அது தொடர்பில் அவதானித்து பதிலளிக்கவுள்ளதாகவும் தேவைப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதிநிதியை அனுப்பிவைக்கவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் எட்டப்பட முடியாது எனவும் அறிக்கையை முன்வைத்தே விவாதம் நடத்தப்படும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகளுடன் மெய்நிகர் ​தொழில்நுட்பத்தில் இன்று மாலை கலந்துரையாடவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஓய்வுநிலை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக ஓய்வுநிலை நீதியரசர் மேலும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்திற்கு தாம் அனுப்பிய கடிதம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நேரடியாகவோ அல்லது மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாகவோ இணைந்துகொள்ளவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது. மனித உரிமைகள் நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்துவதற்கான எழுத்து மூலமான அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்