சுதந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 26-02-2022 | 8:40 PM
Colombo (News 1st) ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலும் சுதந்திரத்தை உறுத்திப்படுத்தும் வகையிலும் தமது அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். அவ்வாறான சுதந்திரத்தை துரதிர்ஷ்டவசமாக சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அத்தகையோர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என கூறுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தம்மை சிங்கள மக்களே தெரிவு செய்தார்கள் என நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தாம் மீண்டும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தமது கொள்கை பிரகடனத்தில் கூறியவாறு பசுமை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க முடியாமற்போயுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாயிகளுக்கு தௌிவூட்டல்களை வழங்க முடியாமற்போனதால், எதிர்க்கட்சியின் தூண்டுதல்களால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார். ஒரு இலட்சம் மஹாவலி ரன்பூமி காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்விடயங்களை குறிப்பிட்டார். இந்நிகழ்வு எம்பிலிபிட்டிய மஹாவலி விளையாட்டு மைதானத்தில் இன்று (26) நடைபெற்றது.