by Staff Writer 26-02-2022 | 4:40 PM
Colombo (News 1st) Lanka IOC நிறுவனம் மீண்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 204 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் டீசல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, Lanka IOC நிறுவனத்தின் ஒரு லிட்டர் டீசலுக்கான புதிய விலை 139 ரூபாவாகும்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய , எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக Lanka IOC நிறுவனம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.
Lanka IOC நிறுவனம், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் எரிபொருட்களின் விலையை அதிகரித்த சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, எரிபொருள் கொண்டுவரும் இரண்டு கப்பல்களுக்கான கடன் கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக எரிக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
38,400 மெட்ரிக் தொன் பெட்ரோலுடன் வரும் கப்பலுக்காக 30 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலிலிருந்து நாளைய தினம் பெட்ரோல் இறக்கப்படுவதுடன், நாளை மறு தினம் அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 30,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிவரும் கப்பலுக்காக 20 மில்லியன் டொலர் கடன் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் அடுத்த வாரமளவில் நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டீசல் ஏற்றிய இரண்டு கப்பல்களை அடுத்த வாரமளவில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இந்த இரண்டு கப்பல்களும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.
மத்திய வங்கியின் நிவாரணத்தை பெற்று, குறித்த இரண்டு கப்பல்களுக்குமான கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.