எரிபொருள் விநியோகத்தில் சவால்கள் ஏற்படக்கூடும்

எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்: எரிசக்தி அமைச்சு

by Staff Writer 26-02-2022 | 5:22 PM
Colombo (News 1st) எதிர்வரும் காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Lanka IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதால், எரிபொருள் நெருக்கடி மேலும் வலுவடையக்கூடும் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், CEYPETCO-வில் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இல்லை என அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார். Lanka IOC நிறுவனத்தில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானோர் எரிபொருளை பெற்றுக்கொள்ள முண்டியடிப்பதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமிக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. Lanka IOC நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 204 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, Lanka IOC நிறுவனத்தின் ஒரு லிட்டர் டீசலுக்கான புதிய விலை 139 ரூபாவாகும். உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய , எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக Lanka IOC நிறுவனம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.