by Bella Dalima 25-02-2022 | 5:35 PM
Colombo (News 1st) உக்ரைனுக்கு உதவுமாறும் ரஷ்யாவின் கொடூரமான தாக்குதல்களை நிறுத்துமாறும் மேற்குலக கூட்டணி நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய தினத்தை போலவே இன்று காலையிலும் தமது நாட்டை தனியாக பாதுகாப்பதாகவும் உலகின் மிகவும் பலம் பொருந்திய படைகள் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு காணொளி வாயிலாக இன்று காலை உரையாற்றிய போதே உக்ரைன் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் தாக்குதல்கள் ஆரம்பமானதாக அவர் கூறியுள்ளார்.
இராணுவத்தளங்கள் மாத்திரமல்லாது பொதுமக்களின் இருப்பிடங்களும் குடியிருப்புத் தொகுதிகளும் இலக்குவைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களை தாம் இலக்கு வைக்கவில்லையென ரஷ்யா முன்னர் தெரிவித்திருந்தது. இருப்பினும், தலைநகர் Kyiv-இல் மக்களின் குடியிருப்புகளையே ரஷ்யாவின் ஏவுகணைகள் இன்று காலை தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மோதலை முடிவிற்கு கொண்டுவர ரஷ்யா தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய மற்றும் ரஷ்ய மொழிகளில் அமைந்திருந்த நாட்டு மக்களுக்கான தனது உரையின் போதே யுத்த நிறுத்தத்திற்கான கோரிக்கையை அவர் ரஷ்யாவிடம் முன்வைத்தார்.
பகைமையை எவ்வாறு முடிவிற்கு கொண்டுவருவதென்பது பற்றியும், தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்துவது குறித்தும் ரஷ்யா தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் எவ்வளவு விரைவாக ஆரம்பிக்கின்றதோ, அந்தளவிற்கு ரஷ்யாவின் இழப்புகள் குறைவாக இருக்குமெனவும் உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தமது நாட்டைத் தாம் பாதுகாத்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த வலியுறுத்தலை விடுத்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் தீர்க்கமானதாகவும் நேரடியானதாகவும் விரைவானதாகவும் இருந்ததாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கூறியுள்ளார்.
இதனிடையே, உக்ரைன் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அந்த முயற்சியின் ஓர் அங்கமாகவே உக்ரைன் தலைநகரிலும் ஏனைய முக்கிய நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனுக்கு அப்பால் செல்லக்கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், NATO கூட்டணி நாடுகளைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் கடப்பாட்டை அவர் மீளவும் உறுதிப்படுத்தியதுடன், NATO அமைப்பிலுள்ள ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அந்த அமைப்பிலுள்ள அனைத்து நாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.