உக்ரைனின் விமானப்படைத் தளத்தை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் விமானப்படைத் தளத்தை கைப்பற்றிய ரஷ்யா; மேற்குலக நாடுகள் கண்டனம்

by Bella Dalima 25-02-2022 | 7:20 PM
Colombo (News 1st) ரஷ்ய தலைநகர் Kyiv-இற்கு அருகிலுள்ள முக்கியமான விமானப்படை தளத்தை தமது படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தளத்தைக் கைப்பற்றுவதற்காக 200 ரஷ்ய ஹெலிகொப்டர்களும் தரையிறங்கும் படைகளும் பயன்படுத்தப்பட்டதாகவும் Kyiv அதன் மேற்கு பகுதியிருந்து முடக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யா தம்மை முதலாவது இலக்காகக் கொண்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கூறியுள்ளார். தலைநகர் Kyiv-இற்குள் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருகின்ற போதிலும், தொடர்ந்தும் தமது ஜனாதிபதி அலுவலகத்திலேயே உள்ள அவர், அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே இதனைக் கூறியுள்ளார். ரஷ்யாவினுடைய ஆக்கிரமிப்பை நிறுத்த மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய தலைவர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். யுக்ரெய்ன் தலைநகர் கியீவிற்கு வடக்கேயுள்ள புறநகர்ப்பகுதிகளில் ரஷ்ய இராணுவம் நுழைந்துள்ளது. ரஷ்ய இராணுவ வாகனங்கள் தலைநகர் நோக்கி நகரும் காணொளிகளை சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ளன. இதேவேளை, உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட ஷெல் மற்றும் வான் தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 102 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தவிர ரஷ்யாவின் தாக்குதல்களில் 127 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, உக்ரைன் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு ரஷ்யாவிற்கு ஆதரவு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடிய போது இந்த உறுதிமொழியை சீன ஜனாதிபதி Xi Jinping தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மேற்குலக நாடுகள் ஒன்றுதிரண்டுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக சீனா கண்டனம் கூட வௌியிடவில்லை. ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உலகளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அமெரிக்காவின் வௌ்ளை மாளிகை அருகில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் உக்ரைனுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஜோர்ஜியாவின் தலைநகர் Tbilisi-இல் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானவர்கள் உக்ரைனுக்கு தமது ஆரதவைத் தெரிவித்துள்ளனர். அத்துடன், உக்ரைனின் தேசிய கீதத்தை இசைத்தவாறு பேரணியாகச் சென்றவர்கள், புதினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதாகைகளையும் ஏந்தியிருந்தனர். போர்த்துக்கலின் லிஸ்பேனில் ரஷ்ய தூதரகத்திற்கு வௌியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.