இலங்கையுடனான முதலாவது T20I: இந்தியா முன்னிலை

இலங்கையுடனான முதலாவது T20I:இந்திய அணி 62 ஓட்டங்களால் வெற்றி

by Bella Dalima 25-02-2022 | 6:04 AM
Colombo (News 1st) இலங்கையுடனான முதலாவது சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (24) நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. முதல் விக்கெட்டில் 111 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட நிலையில், அணித்தலைவர் ரோஹித் சர்மா 44 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றார். 200 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணி முதலாவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் பெத்தும் நிஸ்ஸங்க போல்ட் ஆகி வௌியேறினார். சரித் அசலங்க பெற்ற 53 ஓட்டங்களே அணிக்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவானது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், இலங்கை அணி 06 விக்கட்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினர். இதற்கமைய, 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.