ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்: உக்ரைன் திட்டவட்டம்

ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும்: உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

by Bella Dalima 24-02-2022 | 8:41 PM
Colombo (News 1st) நாட்டின் எல்லையை ஊடறுத்து பிரவேசித்துள்ள ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ளது. டொன்பாஸ் பிராந்தியத்தின் மீது தாக்குல் மேற்கொள்ளப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்ததையடுத்து நிலைமை மோசடைந்துள்ளது. ஜனாதிபதி புதின் சுயாதீன இராச்சியங்களாக ஏற்றுக்கொண்ட டொனெக்ஸ், லுகான்ஸ்க் பிராந்தியங்களின் அமைவிடமாக டொன்பாஸ் வலயம் உள்ளது. அந்த வலயமும் ரஷ்யாவினால் போஷிக்கப்படும் கிளர்ச்சியாளர்களைக் கொண்டுள்ளது. டொன்பாஸ் பகுதியில் நிலைகொண்டுள்ள உக்ரைன் படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி முன்னெச்சரிகை விடுத்துள்ளார். ஆயுதங்களைக் களைந்துவிட்டு வீடு செல்லுமாறு அவர் அறிவித்துள்ளார். இந்த பிரச்சினையில் தலையிடும் அரசாங்கங்கள் எதிர்பாராத விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமெனவும் புதின் எச்சரித்துள்ளார். டொன்பாஸ் வலயத்திலுள்ள உக்ரைனின் விமான பாதுகாப்பு கட்டமைப்பை ரஷ்ய இராணுவம் முழுமையாக அழித்துள்ளதாக வௌிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ரஷ்ய படையினர் மீது தாக்குல் மேற்கொண்டதாகவும் தமது தாக்குதலில் 50 படையினர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், அதனை ரஷ்யா நிராகரித்துள்ளது. எல்லையை ஆக்கிரமித்து ரஷ்ய படையினர் உக்ரைன் மீது தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்த பின்னர் அந்நாட்டின் பெருமளவிலான மக்கள் ரயில் நிலையங்களில் ஒன்று கூடினர். இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி கடும் நிலைப்பாட்டினை வௌிப்படுத்தியுள்ளார். தமது நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் தேவையேற்படின் ஆயுதங்களை வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், ரஷ்யா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் Zelenskyy அழைப்பு விடுத்துள்ளார்.