by Staff Writer 24-02-2022 | 4:01 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஷி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு அவசியம் என மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரத்தின் இணைப்புகளும் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவற்றின் மொழிபெயர்ப்பும் அவசியம் என பிரதிவாதி தரப்பில் மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகிய, அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன், பிரதிவாதிகள் கோரிக்கைக்கு அமைய, மொழிபெயர்ப்பு வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து, தமது ஆட்சேபனையை முன்வைத்தார்.
அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மொழி உரிமை தொடர்பில் ஆராய்கின்ற போது, பிரதிவாதி புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் , குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திரம் காணப்பட்டால் மாத்திரமே நியாயமான விளக்கத்திற்கு செல்ல முடியும் என இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஷி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதிவாதி தரப்பு கோரியதற்கு அமைய, தமிழ் மொழி பெயர்ப்பை வழங்குமாறும் நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.
அதற்கமைய, வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் வரை சந்தேகநபரான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலின் பின்னர், ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வீடொன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.