by Staff Writer 22-02-2022 | 4:30 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று அனுமதி வழங்கப்பட்டது.
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மன்னார் நீதவானின் உத்தரவு இதன்போது தள்ளுபடி செய்யப்பட்டது.
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் 2018 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது.
மனிதப் புதைகுழியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் அறிக்கையும் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது என அரச தரப்பு சட்டத்தரணி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபித்து, பாதிக்கப்பட்டோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல், வவுனியா மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று அறிவித்தார்.
எந்த ஒரு நீதிமன்றிலும் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராவதற்கு சட்டத்தரணிகளுக்கு உரிமை உண்டு எனவும், இது அரசியல் அமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களின் அலுவலகமும் இந்த வழக்கில் இடையீடு செய்வதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், புதைகுழி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மன்னார் நீதவானின் மேற்பார்வையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் சார்பிலும் அந்த அலுவலகம் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பிலும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 நபர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மனித புதைகுழி அகழ்வை நேரடியாக நின்று பார்வையிட முடியும் என்பதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏனைய உறவுகள் அகழ்வு இடம்பெறும் இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவிலிருந்து அவதானிக்க முடியும் எனவும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 10 நிமிடங்கள் மனிதப் புதைகுழி காணப்படும் இடத்திற்கு சென்று அந்த நடவடிக்கைகளை அவதானிப்பதற்கும் அது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கும் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மனிதப் புதைகுழி வழக்கை விரைவாக முடிவுறுத்தும் முகமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை , புதைகுழி தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மன்னார் நீதவானுக்கு வுவனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.