பொருளாதார நெருக்கடிக்கு COVID தொற்று காரணமா? 

by Staff Writer 22-02-2022 | 8:53 PM
Colombo (News 1st) எந்தவொரு விடயமும் காரணமின்றி இடம்பெறாது. இன்று எமது நாளாந்த செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும் பல்வேறு நெருக்கடிகள் வந்தாலும் அந்த நெருக்கடிகள் ஒரே தடவையில் எழவில்லை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். எண்ணெய் நெருக்கடி, மின்சார நெருக்கடி, டொலர் நெருக்கடி, விவசாய, உணவு நெருக்கடி, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட அனைத்து நெருக்கடிக்கும் ஏதோவொரு ஆரம்பம் உள்ளது. 2015 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட " Our Brand Is Crisis" என்ற ஹொலிவுட் திரைப்படம் அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு நெருக்கடிகள் உருவாக்கப்படுவதை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படமாகும். அரசியல் அதிகாரம் அல்லது பொருளாதார அனுகூலங்கள் எதுவாயினும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி மூலம் சாதகமான சூழ்நிலையே உருவாகின்றது. இதனால் இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக புத்திசாதுர்யமாக சிந்தித்து அதனை புரிந்துகொண்டு பதில்களை தேட வேண்டியது அவசியமாகும். இந்த நெருக்கடிகள் என்ன? இவை திடீரென உருவானதா? அல்லது யாராவது அவற்றை உருவாக்கினார்களா? காரணமின்றி எதுவும் நடக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அப்படியாயின், இந்த நெருக்கடிகள் இயல்பாக உருவாக முடியுமா? டொலர் நெருக்கடியை கவனத்திற்கொள்வோம். உண்மையில் என்ன நடந்தது? டொலர் நெருக்கடிக்கு COVID தொற்று நிலைமை காரணம் என்றால், COVID நிலைமை பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்திய 2020 ஆம் ஆண்டில் எமது நாட்டின் ஏற்றுமதி வருமானமும் வௌிநாடுகளில் உள்ள எம்மவர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணமும் எவ்வாறு அதிகரித்தது? எனினும், COVID நிலைமை படிப்படியாக தணிந்தபோது ஏற்றுமதி வருமானமும் வௌிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பும் பணமும் குறைவடைந்தது. நாம் என்ன செய்தோம்? கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைவாக டொலரின் பெறுமதியை தீர்மானிக்க இடமளிக்காது நாட்டின் கையிருப்பை முடிந்தளவு சந்தையில் விநியோகித்து டொலரின் பெறுமதியை நிலையாக பேணுவதற்கு முயற்சித்தோம். இப்போது நாட்டில் டொலர் கையிருப்பு இல்லை என கூறுகின்றார்கள். நிலைமை இவ்வாறிருக்க ஒரு பகுதியினருக்கு டொலர் ஒன்றுக்காக மேலதிகமாக 10 ரூபாவை வழங்கவும் தீர்மானித்தனர். இப்போது என்ன நடந்துள்ளது? 10 ரூபா மேலதிகமாக கிடைக்காதவர்கள் அவர்களது டொலர்களை வௌிநாடுகளிலேயே வைத்துக்கொண்டுள்ளனர். டொலர் இல்லை, கையிருப்பு இல்லை என கூறிக்கொண்டே கடந்த ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலரை இறையாண்மை முறிகளுக்காக மீள செலுத்தினோம். எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி உருவாகும்போது, சர்வதேச சந்தையில் இறையாண்மை முறிகளின் பெறுமதி குறைவடையும் என்று பொருளாதாரம் தொடர்பில் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 500 மில்லியன் டொலர் செலுத்தும் இந்த நடவடிக்கையை பிற்போடுமாறு துறைசார்ந்தவர்கள் தொடர்ச்சியாகக் கூறிவந்தனர். இறையாண்மை முறிகள் என்பது நாம் வங்கிக்கு சென்று பெற்றுக்கொள்ளும் கடனைப் போன்றதல்ல. அதனை மீள செலுத்துவதை தாமதப்படுத்துவதன் ஊடாக முதலீட்டாளருக்கு நட்டமும் ஏற்படாது. அப்படியாயின், எதற்காக இறையாண்மை முறிகளுக்காக பணம் செலுத்தப்பட்டது? எவருக்கேனும் அனுகூலம் ஏற்படாவிட்டால் இதனை செலுத்துவதற்கு வேறு காரணம் இருக்க மாட்டாது என நிபுணர்கள் கூறிவந்தனர். டொலர் பிரச்சினை அவ்வாறு உருவெடுக்கும்போது மேலும் பல பிரச்சினைகள் வலுவடைந்தன. அவற்றில் உரப் பிரச்சினை முக்கியத்துவம் பெறுகிறது. திடீரென நாட்டில் டொலர் இல்லை என கூறி கடந்த வருடம் ஏப்ரல் 27 ஆம் திகதி ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் வர்த்தமானியொன்றை வௌியிட்டு உரம் மற்றும் இரசாயனங்களின் இறக்குமதிக்கு தடை விதித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல் நிலை தொடர்பாக புதிதாகக் கூற வேண்டியதில்லை. இந்த சிக்கலுக்கு மத்தியில் என்ன நடந்தது? சீனாவிடமிருந்து 90,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை இறக்குமதி செய்வதற்காக Qingdao Seawin Biotech என்ற நிறுவனத்திற்கு விலை மனுவை வழங்கினர். இந்த உரத்தில் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிர்கள் இருப்பதாக எமது நாட்டின் புத்திஜீவிகள் கண்டுபிடித்தனர். இறுதியில் என்ன நடந்தது? பெயர் மாற்றம் செய்யப்பட்ட கப்பல் ஒன்று பல நாட்களாக எமது கடலில் சஞ்சரித்து இறுதியில் புத்திஜீவிகளின் அழுத்தம் காரணமாக திரும்பிச் சென்றது. ஆனால், உரத்தைப் பெறாமலேயே அந்த கப்பலுக்காக நாம் 69 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலுத்தினோம். இந்த கொடுக்கல் வாங்கல்களின் இடைத்தரகர்கள் யார் என்பது விபரம் அறிந்தவர்களுக்கு தெரியும். அது மட்டுமா? இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரம் நினைவில் உள்ளதா? சந்தை பெறுமதியை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு தொகையை மேலதிகமாக செலுத்தியே இந்த திரவ உரத்தை இறக்குமதி செய்தனர். பாராளுமன்றத்தில் வௌிக்கொணரப்பட்ட தகவல்களுக்கு அமைய, இந்த உர கொடுக்கல் வாங்கலின்போது 29 கோடி ரூபாவை தனியார் வங்கி கணக்கொன்றில் வைப்பிலிடுவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர். நாட்டின் விவசாயத்துறையில் சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி, ஒரு சிலர் நன்மை அடைந்தனர். அடுத்தது எரிவாயு... திடீரென அரசாங்கத்தின் எரிவாயு நிறுவனம் சிலிண்டரின் எடையைக் குறைத்து 18 லிட்டர் கொள்ளளவில் எரிவாயுவை சந்தையில் விநியோகித்தது. எரிவாயு நிறுவனங்கள் இரண்டும் விலை அதிகரிப்பிற்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டவிரோத செயற்பாடு ஆட்சபனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து நிறுத்தப்பட்டாலும் சந்தையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. விலை அதிகரிப்பிற்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டதன் பின்னர் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்பட்டாலும் ஆங்காங்கே எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின. இலங்கைக்கு நீண்ட காலத்திற்கு எரிவாயுவை விநியோகிப்பதற்கான விலைமனுவை பெற்றுக்கொண்டவர்கள் மாஃபியாவில் ஈடுபடுவதாகவும் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் அரசாங்கத்தின் எரிவாயு நிறுவன தலைவர் வௌிப்படையாகவே கூறினார். எரிவாயுவின் சேர்மானங்கள் மாற்றப்பட்டமையே விபத்துகளுக்கான காரணம் என ஜனாதிபதி நியமித்த நிபுணர் குழு இறுதியில் உறுதிப்படுத்தியது. இதற்கிடையே மீண்டும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் பெரும் பாடுபட்டனர். இப்போது என்ன நடந்துள்ளது? நீண்டகால விலைமனுக்கள் எதுவும் இன்றி அவசர கொள்வனவின் ஊடாக எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்கு தயாராகி வருவதாக தகவல் வௌியாகியுள்ளது. புதிய பிரச்சினை எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியாகும். எமது நாட்டிற்கு நீண்டகால அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை விநியோகிக்கும் விலைமனு PetroChina நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. நாம் அறிந்த வகையில், குறித்த காலப் பகுதிக்கு நாட்டிற்கு தேவைப்படும் எண்ணெயின் அளவை கணக்கிட்டே நீண்டகால விலை மனுக்கள் வழங்கப்பட வேண்டும். நீண்டகால விலைமனு வழங்கப்பட்டால், ஒரே தடவையில் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்பட மாட்டாது. பெற்றுக்கொண்ட எண்ணெய்க்கான கட்டணத்தை செலுத்துவதற்கு குறைந்தது 180 நாட்களேனும் கிடைக்கும். அவ்வாறாயின், எண்ணெய்க்கு எவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டது? சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மாத்திரம் அல்லாது சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான எண்ணெயையும் நாம் இறக்குமதி செய்கின்றோம். மசகு எண்ணெய் இறக்குமதிக்கான நீண்டகால விலைமனு கொன்சியோ என்ற நைஜீரிய நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது. எனினும், அந்த நிறுவனம் மசகு எண்ணெய் ஒரு துளியையேனும் வழங்கவில்லை. இறுதியில் டொலர் இல்லை என தெரிவித்து சுத்திகரிப்பு நிலையத்தையும் மூடினர். இதனால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயையும் இறக்குமதி செய்ய நேரிட்டது. டொலர் இல்லை, எண்ணெய் கப்பல் இல்லை, எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என துறைக்கு பொறுப்பான அமைச்சரே பகிரங்கமாக கூறியபோது, எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்து பிரச்சினை உக்கிரமடைந்தது. இன்று கப்பல்களுக்கான கட்டணத்தை செலுத்தி நடப்பு விலைக்கு அமைய எண்ணெய்யை கொள்வனவு செய்கின்றனர். அடுத்தது மின்சார நெருக்கடி... மின்சார பொறியியலாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது. திட்டமிட்ட வகையில், மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டதாக மின்சார சபை உயர் அதிகாரிகள் கூறினர். இறுதியில் என்ன நடந்தது? தேசிய கட்டமைப்பின் சமநிலை சீர்குலைந்து நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து கிடைக்கும் விநியோகம் குறைவடைந்தது. 300 மெகாவாட் மின் பிறப்பாக்கி முழுமையாக செயலிழந்தது. நீர் மின் உற்பத்தியை அதிகரிக்கவும், டீசல் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திக் கொள்ளளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என கூறுகின்றனர். மறந்துவிட வேண்டாம்... LNG ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதத்தையும் எமது LNG விநியோகத்தையும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளோம். இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக கவனத்திற்கொள்ளும்போது, இவை இயல்பாக உருவானதா என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இவை அனைத்தும் பில்லியன் கணக்கான டொலர் கொடுக்கல் வாங்கல்கள். இவை சில நெருக்கடிகள் மாத்திரமே ஒரு காலம் எரிவாயு, பின்னர் எண்ணெய், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சீமெந்து, அது மட்டுமா பால்மாவிற்கும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். இந்த அனைத்து பிரச்சினையாலும் மக்களே பாதிக்கப்பட்டனர். நிலைமை அவ்வாறிருந்தாலும், ஒரு சிலருக்கு அதன் பாதிப்பு ஏற்படவில்லை என்பது தற்போது தௌிவாகின்றது. COVID தாக்கத்திற்குள்ளான ஏனைய நாடுகள், குறைந்தபட்சம் தெற்காசிய நாடுகளிலேனும் இத்தகைய நிலைமை உருவாகவில்லை. அப்படியாயின் இந்த பிரச்சினைகளுக்கு COVID தொற்று காரணமா?   தெரிவிப்பது நாங்கள் - தீர்மானிப்பது நீங்கள்!