பாராளுமன்றம் இன்று(22) கூடுகிறது

பாராளுமன்றம் இன்று(22) கூடுகிறது

by Staff Writer 22-02-2022 | 10:06 AM
Colombo (News 1st) இன்று (22) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. அதற்கமைய, உற்பத்தி மூலப்பொருட்களை இறக்குமதி செய்வோருக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான சட்டத்தின் கீழுள்ள கட்டளைகளையும் இறப்பர் மீள்செய்கைக்கான நிவாரண சட்டத்தின் கீழுள்ள கட்டளைகளையும் இன்று(22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் நாளை (23) விவாதிக்கப்படவுள்ளது. வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதற்குரிய கட்டளைகளை திருத்துவதற்கும் மரம் வெட்டுதல் சட்டத்திலுள்ள தெங்கு தொடர்பான வர்த்தமானியினூடாக குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளையும் நாளை மறுதினம் (24) பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்திற்குட்பட்ட சில நிபந்தனைகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்ட சட்டத்தின் கீழுள்ள சில கட்டளைகளையும் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த காலப்பகுதியில் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இரங்கலை தெரிவிப்பதற்கான பிரேரணை ஒன்று எதிர்வரும் 25 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட பல பாராளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன. அதற்கமைய, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு நாளை மறுதினம்(24) கூடவுள்ளது. மேலும், இன்றைய தினம்(22) வலுசக்தி அமைச்சு சார் ஆலோசனைக் குழு, விவசாய அமைச்சு சார் ஆலோசனைக் குழு, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு சார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன. நாளை(23) தொழில் அமைச்சு சார் ஆலோசனைக்குழு மற்றும் காணி அமைச்சு சார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன. இதேவேளை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கூட்டமும் இன்று(22) நடைபெறவுள்ளது.