by Staff Writer 22-02-2022 | 7:24 PM
Colombo (News 1st) ஒரு ஆசிரியரின் சற்றும் எதிர்பாராத மரணத்தால் தலவாக்கலை - லோகி தோட்டம் இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற விபரீத விளைவுகளுக்கு இந்த ஆசிரியரின் மரணமும் சான்றாக அமைந்துள்ளது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை - லோகி தோட்ட சந்தியில் பாரிய மரமொன்றை எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாது சிலர் வெட்டிய போது அந்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வேலுசாமி மகேஷ்வரன் என்ற ஆசிரியர் மீது முறிந்து வீழ்ந்தது.
நுவரெலியா வலயக் கல்வி பணிமனைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த இவரது பயணம் மாத்திரமன்றி வாழ்க்கையும் சம்பவ இடத்திலேயே முடிவிற்கு வந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் ஆசிரியரின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று (21) எதிர்ப்பிலும் ஈடுபட்டனர்.
லோகி தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட 39 வயதான மகேஷ்வரன் பிரதேசத்திற்கே பெருமை சேர்க்கும் கணிதப் பாட ஆசிரியராக தலவாக்கலை தேசிய பாடசாலையில் கடமையாற்றி வந்தார்.
மீண்டும் திரும்பி வர முடியாதவண்ணம் மீளாத்துயில் கொள்ளும் ஆசிரியரின் வீடு இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
பாசம் நிறைந்த மகனாகவும் அன்பான கணவராகவும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும் மகேஷ்வரன் வாழ்ந்த வீடு இன்று அவரது பூதவுடலை சுமப்பதற்கு தயாராகியுள்ளது
சிறு வயது முதல் கல்வியிலும் விளையாட்டிலும் அதீத ஆர்வத்தை வௌிப்படுத்திய இந்த ஆசிரியரின் திறமைக்கு அவரின் வீட்டில் உள்ள விருதுகளும் சான்றிதழ்களுமே சாட்சியாக விளங்குகின்றன.
லிந்துலை சாந்தகூம்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்திலும் தலவாக்கலை தேசிய பாடசாலையிலும் மாணவர்களின் கணித பாட சித்திக்கு காரணமாக திகழ்ந்த ஆசிரியர் மகேஷ்வரனின் எதிர்பாராத மறைவு சமூகத்திற்கு பல பாடங்களை போதிக்கின்றது.
எந்தவொரு செயலாக இருப்பினும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து முன்கூட்டியே சிந்தித்து தகுந்த பாதுகாப்புடன் அதனை நிறைவேற்றினால் இனிவரும் காலங்களிலேனும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.