உலகின் முன்னணி வீரரை வீழ்த்திய தமிழக சிறுவன்

சதுரங்க விளையாட்டில் உலகின் முன்னணி வீரரை வீழ்த்திய தமிழக சிறுவன்; முதல்வர் உள்ளிட்ட பலரும் பாராட்டு

by Bella Dalima 22-02-2022 | 4:58 PM
Colombo (News 1st) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் Airthings Masters சதுரங்க விளையாட்டு போட்டி இணைய வழியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா 8 ஆவது சுற்றில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு வயது 16. இது இந்த போட்டித் தொடரில் அவர் பதிவு செய்த இரண்டாவது வெற்றியாகும். மேக்னஸ் கார்ல்சன் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமாவார். வெறும் 39 நகர்வுகளில் அவர் வெற்றிபெற்று கார்ல்சனுக்கு அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, பிரக்ஞானந்தா 8 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா செஸ் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமான நோர்வேயின் மேக்னஸ் சார்ல்சனை வெற்றிகொண்டதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள பிரக்ஞானந்தா மேலும் பல வெற்றிகளை குவிப்பதற்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதேவேளை. இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டென்டுல்கரும் பிரக்ஞானந்தாவிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப் பிரபலங்கள் சிலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.