முதலீடு செய்து நாட்டை கட்டியெழுப்ப முன்வருமாறு தொழில் முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

by Staff Writer 21-02-2022 | 8:10 PM
Colombo (News 1st) உள்நாட்டு கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு இணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு இன்று (21) அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு துறைகள் சார்ந்த பாரியளவிலான தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோரை இன்று (21)  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார். அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வௌிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்ளுதல், அரச நிதி கொள்கை, வௌிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, ஏற்றுமதி அதிகரிப்பு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி, விவசாய உற்பத்தி, உர விநியோகம், சுற்றுலாத் துறை ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது. கேள்வி அதிகரித்துள்ளமையே சீமெந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் எதிர்காலத்தில் சீமெந்து தயாரிக்கும் நடவடிக்கையை முழுமையாக நாட்டிற்குள் மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அநேகமான பொருட்களின் நிர்ணய விலைகளை அகற்றுவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் நிதி அமைச்சர், வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக பணத்தை வழங்கி எண்ணெய்யை கொள்வனவு செய்வது சவாலாக அமைந்தாலும் அபிவிருத்தி பணிகள் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எரிபொருள் கையிருப்பை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அனைத்து வௌிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதற்கான இயலுமை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் கடன் அல்லாத முதலீடுகளை நாட்டிற்குள் ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற உண்மைக்கு புறம்பான பிரசாரங்கள் காரணமாக வௌிநாட்டு முதலீடுகளை நாடு இழக்க நேரிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வியை தொடர்வதற்காக மாணவர்கள் வௌிநாடு செல்வதை முற்றாக நிறுத்தி நாட்டிற்குள் அந்த கல்விக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தேவையான பொறிமுறையொன்றை தயாரிக்குமாறு தொழில் முயற்சியாளர்களிடம் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.